உயிரியப் பொருண்மை எனவும் உயிரியச் சக்தி (biomass) எனவும் அழைக்கப்படும் இது சேதனப் பொருட்களில் இருந்து உருவாகும் எரிபொருளாகும். பிரதானமாக வெப்பத்தினை வெவ்வேறு பிரயோகங்களுக்கு வழங்குவதற்கான மீள்புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலைபெறுதகு சக்தி மூலமாக இது விளங்குகின்றது. இது மின்சக்திப் பிறப்பாக்கத்திற்காகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உயிரியச் சக்தியின் பயன்பாடுகளை இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ‘பாரம்பரியப் பயன்பாடு மற்றும் நவீன பயன்பாடு’. பாரம்பரியப் பயன்பாடு என்பது விறகு, விலங்குக் கழிவு மற்றும் பாரம்பரிய நிலக்கரி போன்ற வடிவங்களில் உயிரியப் பொருண்மை எரிபற்று நிலையினை அடைவதைக் குறிக்கின்றது. நவீன உயிரியச் சக்தித் தொழில்நுட்பங்கள் கரும்புச் சக்கையில் இருந்தும் ஏனைய தாவரங்களில் இருந்தும் பெறப்பட்ட திரவ உயிரிய எரிபொருளினையும் உயிரியச் சுத்திகரிப்பாலைகளின் கழிவுகளின் ஒக்சிசனற்ற சமிபாட்டினால் உருவாகும் உயிரிய வாயுவினையும் மரக்கட்டைகளை வெப்பமாக்கும் முறைமைகளையும் ஏனைய தொழில்நுட்பங்களையும் உள்ளடக்குகின்றது.

 உலகின் சுமார் முக்கால் பங்கு மீள்புதுப்பிக்கத்தக்க சக்திப் பாவனை உயிரியச் சக்தியினைச் சம்பந்தப்படுத்துகின்றது. இவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்டது பாரம்பரிய உயிரியப் பொருண்மைப் பாவனையினைக் கொண்டுள்ளது. மொத்த இறுதிச் சக்தி நுகர்வின் 10 சத விகிதம் உயிரியச் சக்தியினைக் கொண்டுள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டின் உலகளாவிய சக்திப் பிறப்பாக்கத்தின் 1.4 சத விகிதத்தினையும் இது கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் கிராக்கியினைக் கொண்ட சனத்தொகை கூடிய பிரேசில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் சக்தி விநியோகத்தினை அதிகரிக்க உயிரியப் பொருண்மை கணிசமான சாத்தியத்தினைக் கொண்டுள்ளது. வெப்பத்திற்காக அல்லது மின் பிறப்பாக்கத்திற்காக இதனை நேரடியாக எரிக்கலாம் அல்லது எண்ணெய் அல்லது எரிவாயுப் பதிலீடுகளாக இவற்றினை மாற்ற முடியும். மண்ணெண்ணெய்க்குப் பதிலான சௌகரியமான மீள்புதுப்பிக்கத்தக்க மாற்றீடான திரவ உயிரிய எரிபொருள் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

திரவ உயிரிய எரிபொருள் பாவனையில் பிரேசில் முன்னணி வகிக்கின்றது. நெகிழ்வுத்தன்மைமிக்க எரிபொருளில் இயங்கும் வாகனத் தொகுதியினை பிரேசில் கொண்டுள்ளது. இவ்வாகனங்கள் உயிரிய எதனோல் – சீனி அல்லது சோளம், கரும்பு போன்ற மாச்சத்துக் கொண்ட பயிர்களில் காணப்படும் மாச்சத்தின் நொதிப்பினால் உருவாகும் மதுசாரம் – மூலம் இயங்குகின்றன.

இலங்கையில் அடிப்படைச் சக்தியினை வழங்குவதில் உயிரியப் பொருண்மை இன்னும் முக்கியமான வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. கிராமங்களில் சமையலுக்காகப் பெருமளவில் விறகும் ஏனைய உயிரியப் பொருண்மை வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நகரப் புறங்களில் இது குறைவாகக் காணப்படுகின்றது. கிராம மக்களின் சக்தித் தேவையின் பெரும்பகுதி விறகினால் பூர்த்தி செய்யப்படுகின்ற போதிலும் நாட்டின் சக்திக்காக உயிரியப் பொருண்மையின் பாவனையினை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற் துறையில் வெப்ப சக்திக்காக இதனை அதிகரிக்கலாம்.

call to action icon